தலைப்புச் செய்திகள்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ராஜிநாமா

ரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு – ராஜிநாமா கடிதத்தை அவர் அனுப்ப்பி வைத்துள்ளார்.

2026 ஏப்ரல் 17 திதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான தொடர் விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவும், 2009 முதல் இறக்குமதிகளை ஆய்வு செய்வதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஈடுபடுத்தவும் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தனது இந்த முடிவை எடுத்துள்ளதாக குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு முயற்சிகளையும், வெளிப்படையான ஆட்சிமுறைக்கான முன்னெடுப்புகளையும் தான் ஆதரிப்பதாகவும், தொடர் விசாரணைகள் மூலம் உண்மை வெளிப்படும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை சுதந்திரமாகவும், எந்தவொரு செல்வாக்குமின்றியும் தொடர்வதை உறுதி செய்வதற்காகவே – தான் பதவி விலகுவதாகவும், விசாரணையிலிருந்து வெளிவரும் எந்தவொரு முடிவுகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் குமார ஜயகொடி மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, தனக்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், தூய்மையான அரசியல் கலாசாரம் மற்றும் அரசாங்கத்தின் பரந்த சீர்திருத்த செயல்திட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எரிசக்தி அமைச்சின் செயலாளரும் ராஜநாமா செய்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.