
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில், அரச புலனாய்வு சேவையின் ஓய்வுபெற்ற தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளளனர்.
ஊடகங்களிடம் இன்று (25) உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர்; சுரேஷ் சாலே இன்று காலை பேலியகொட பொலிஸ் பிரிவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முடிவுகளின் மூலம் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்து பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் விளக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
சுரேஷ் சாலே மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் விசாரித்த போதிலும், சாலே மீதான குற்றச்சாட்டுகள் தற்போது வெளியிடப்படாது என்றும், அவருக்கு எதிரான விசாரணை முடிந்த பிறகு மட்டுமே அவை வெளியிடப்படும் என்றும் ஊடக தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, மேலும் விசாரணைக்காக 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட உள்ளார்.



