
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களின் கீழ், சுமார் 24.4 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொது நிதிக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனர்த்த நிவாரணத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க – நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பொது நிதிக் குழுவின் கூட்டத்தின் போது, இந்த விடயம் தெரியவந்தது.
வீடுகள் மற்றும் பிற வளாகங்களை சுத்தம் செய்தல், வீட்டுப் பொருட்களை வாங்குதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்குதல் ஆகியவற்றுக்காக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், சேத மதிப்பீடுகள் மற்றும் நில அடையாளம் காணல் போன்ற செயல்முறைகள் காரணமாக – வீட்டு மறுகட்டமைப்பு மற்றும் வாடகை உதவித் தொகைகள் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கினர் என்று நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு – அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சரிபார்ப்பு நடைமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்றும் குழுவிடம் அதிகாரிகள் மேலும் தெளிவுபடுத்தினர்.

இதற்கிடையில், நிவாரணக் கொடுப்பனவுகளை எதிர்பார்ப்பவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் குழு உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். மேலும் குறிப்பாக வீட்டு உதவியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


