
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (03) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக – ஷிரந்தி ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், தனது சட்ட ஆலோசகர் மூலம், அந்தத் திகதியில் தான் ஆஜராக முடியாது என்று, பொலிஸாருக்குத் தெரிவித்து, இரண்டு வார கால நீட்டிப்பு கோரினார்.
அவரின் கோரிக்கையை நியாயப்படுத்தும் வகையில் எந்த வைத்திய அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாததால், பெப்ரவரி 03ஆம் தேதி முன் ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் – அதே நாளில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ – முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், அந்த நேரத்தில் அவர் நாட்டில் இல்லாததால் மாற்றுத் திகதியைக் கோரியதாகவும், அதைத் தொடர்ந்து புதிய திகதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


