செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண், கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவிப்பு

🕔 March 2, 2016

Senthil - 098– க. கிஷாந்தன் –

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை சரணடைந்தபோது, அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் விடுவித்தார்.

அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை கடந்த 2014ஆம் ஆண்டில் இடைமறித்து இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பல சந்தர்ப்பங்களில் செந்தில் தொண்டமான் மன்றில்ஆஜராகியிருக்கவில்லை.

இதேபோன்று, நேற்று செவ்வாய்கிழமை இவ்வழக்கு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அமைச்சர் செந்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை சரணடைந்த செந்தில் தொண்டமான், தாம் மன்றில் இதற்கு முன்னர் முன்னிலையாகாத காரணத்தை விளக்கிக்கூறும் வகையில் தனியார் மருத்துவ அறிக்கை ஒன்றை மன்றில் சமர்பித்தார்.

எனினும் இதனை நிராகரித்த நீதவான் பிரசாத் லியனகே, அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவரால் வழங்கப்படும் மருத்துவ அறிக்கைகளை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் செந்தில் தொண்டமான் சார்பில் பிரசன்னமாகிய சட்டத்தரணி, நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட பிடியாணை உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் பிடியாணை உத்தரவை ரத்து செய்தார்.

அத்துடன் சந்தேக நபரான செந்தில் தொண்டமானுக்கு கடும் எச்சரிக்கை வழங்கிய நீதவான், அடுத்த வழக்கு விசாரணையின்போது முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்