
– பாறுக் ஷிஹான் –
கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமனம் வழங்குவதற்கு – எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆந் திகதி வரை மீண்டும் தடைவிதித்து, கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்தை தடுத்து நிறுத்துகின்ற வகையில், கல்முனை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை – கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் திங்கட்கிழமை (17) மறு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான டொக்டர் கே.எல். நக்பர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் பிரதிவாதிகளான கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜெ. லியாகத் அலி உள்ளிட்ட 14 பேர் கொண்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரிணிகள் தத்தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து இரு தரப்பினரின் எழுத்து மூல சமர்ப்பணத்தை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, எதிர்வரும் டிசம்பவர் மாதம் 08ஆந் திகதி – குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரையில் குறித்த நியமனத்தை வழங்குவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
மனுதாரர் சார்பாக சட்டத்தரணிகள் ஐ .எல்.எம் றமீஸ், எம்.எம்.எம். முபீன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
செய்திப்பின்னணி
கிழக்கு மாகாணம் ஆயுர் வேத திணைக்களம் நேர்முகப்பரீட்சை நடத்தி, வழங்கப்படவுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமனத்துக்கு தடை உத்தரவினை(Stay Order) கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்திருந்தார்.
குறித்த வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்தை தடுத்து நிறுத்துமாறு கோரும் வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு (Writ Application) தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் ஒக்டோபர் மாதம் 24ஆம திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டது.
குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர் கே.எல். நக்பர் – தனக்கு எதிரான அநீதியை கேள்விக்குட்படுத்தி, சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் ஊடாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இவர் இம்மனுவில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டதுடன் – ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமனத்தினை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் பிரதிவாதிகள் நொவம்பர் மாதம் 17 ஆந் திகதி ஆஜராக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தார்.
கடந்த 12.08.2025 அன்று ஆயுர்வேத திணைக்களத்தினால், வைத்திய அத்தியட்சகரை தெரிவு செய்வதற்கு – குறித்த நேர்முக பரீட்சை நடத்தப்பட்டிருந்தது. இதன்போது, அங்கு வழங்கப்பட்ட புள்ளிகள் விடயத்தில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ள டொக்டர் நக்பர், நேர்முக பரீட்சையின் போது மதிப்பெண் வழங்கப்பட்ட மதிப்பெண் தாளில் – உரிய தகைமை நிலையில் இருந்த சிரேஷடத்திற்கு, உரிய மதிப்பெண் வழங்காமல் தகைமையற்ற நிலையில் இருந்தவருக்கு மோசடியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


