ரவிராஜ் கொலைக்கு 05 கோடி ரூபாய்; கோட்டா கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு

🕔 February 27, 2016
Raviraj - 0230
மு
ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்காக, 05 கோடி ரூபாவினை கொலையாளிகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியதாக புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் லியனாராய்சி அபேரத்ன நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார்.

மேற்படி பணத்தொகை கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாக, அவர் மேலும் கூறினார்.

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சூழ்ச்சியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலைக்கான பணத் தொகையானது, பாதுகாப்பு அமைச்சினைத் சேர்ந்த வசந்த என்பவர் ஊடாக கருணா தரப்பினருக்கு வழங்கப்பட்டதாகவும் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் லியனாராய்சி விபரித்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்க, அரச புலனாய்வுப் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டூல், கருணா தரப்பினைச் சேர்ந்த வருண் ஆகியோருக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் தெரிந்திருந்ததாகவும்  புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ரவிராஜை கொலை செய்யப் போவதாக கருணா குழுவைச் சேர்ந்த வருண் என்னிடம் கூறினார். அரச புலனாய்வு தகவல் பிரிவிற்கு சொந்தமான பச்சை நிற முச்சக்கர வண்டியொன்றில் பிரசாத், விஜிர, செனவி, அஜித் போன்றவர்கள் இருந்தார்கள். வஜிரவின் கையில் கறுப்புநிற பையொன்று இருந்தது.

இதற்கு இரண்டு வாரங்களின் பின்னர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டார்.

ரவிராஜ் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர், மீண்டும் கருணா குழுவைச் சேர்ந்த வருணை சந்தித்தேன். ரவிராஜ் கொலைக்காக கோட்டா 05 கோடி வழங்கினார் என, என்னிடம் கூறினார்” என்றார்.

இந்த மனு மீதான விசாரணைகள் அடுத்த மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்