
விளையாட்டு அமைச்சுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வரி விலக்களிக்கப்பட்ட பஸ் வண்டி, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரிக்க உள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பஸ் வண்டி இவ்வாறு மாற்றப்பட்டதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, விடயத்தை நிதிக் குற்றப் புலனாய்வுப் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேதிக செயலாளர் ஒருவரும் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் சண்டே டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, ஷிரந்தி ராஜபக்ஷவின் தலைமையில் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘சிரிலிய’ திட்டத்துடன் தொடர்புடையது. சிரிலிய கணக்குடன் தொடர்புடைய 07 முறைகேடுகள் குறித்த அறிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
ஆயினும், போதுமான ஆதாரங்கள் இல்லாததால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், இந்த 06 வழக்குகள் பின்னர் மூடப்பட்டன.

இருப்பினும், பஸ் வழங்கப்பட்டமை தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்தமையை அடுத்து, நீதிமன்றத்தில் புதிய சமர்ப்பணங்களைச் செய்வதற்கு புலனாய்வு அதிகாரிகள் தீர்மானித்தனர்.
சண்டே டைம்ஸ் செய்தியின்படி, இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக லலித் வீரதுங்கவையும் முன்னாள் மேலதிக செயலாளரையும் வரவழைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது.


