
அமெரிக்கா தலைமையில் 2003ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பிற்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் எதிர்கொண்டது போன்ற முடிவை, ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமெய்னி சந்திக்க நேரிடும் என்று, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்துள்ளார்.
“இஸ்ரேலிய பொதுமக்கள் மீது போர்க்குற்றங்களைத் தொடர்ந்து செய்வதையும் ஏவுகணைகளை வீசுவதையும் எதிர்த்து – ஈரானிய சர்வாதிகாரிக்கு நான் எச்சரிக்கிறேன்” என்று இஸ்ரேல் கட்ஸ் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேல் அரசுக்கு எதிராக இதே பாதையைத் தேர்ந்தெடுத்த ஈரானின் அண்டை நாடான சர்வாதிகாரியின் தலைவிதியை அவர் (கமெய்னி) நினைவில் கொள்வது நல்லது” என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
“தெஹ்ரானில் உள்ள படையினருக்கும், ராணுவ இலக்குகளுக்கும் எதிராக இன்றும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்கள் தெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் விடுத்துள்ள அச்சுறுத்தல்களை அவர் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.



