வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார்

மேற்படி நபர் இவ்வாறு 53 கைத்தொலைபேசிகளைக் கடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.
வெலிக்கடை சிறையிலுள்ள பாதாள உலக நபரான ‘தெமட்டகொட சமிந்த’ என்பவரின் பெயரைப் பயன்படுத்தி, மேற்படி சிறைக் காவலர் பலரிடம் கப்பம் வசூலித்துள்ளார் என்றும், அந்தப் பணத்திலேயே கைத்தொலைபேசிகளை வாங்கி வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு விற்றுள்ளதாகவும் பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பொலிஸார்,கொழும்பு மேலதிக நீதிவான் ஒகஸ்டா அத்தபத்துவின் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
குருநாகல் பிரதேசவாசியான இவர், குருநாகலிலுள்ள ஈஸிகேஷ் நிலையமொன்றில் பணப்பரிமாற்றம் செய்வது அந்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவில் பதிவாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 16ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.
தற்சமயம் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சமிந்த எனும் பாதான உலக நபரின் வழிகாட்டலுடன் அவரது பெயரைப் பயன்படுத்தி குருநாகல், அநுராதபுரம், வெஹெர போன்ற பல பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து ஈஸிகேஷ் முறையில் லட்சம் ரூபாய்களை இவர் கப்பமாகப் பெற்றுள்ளதாவும் கூறப்படுகிறது.
அந்தப் பணத்தின் மூலம் சமிந்தவுக்கு மாத்திரம் 30 கைத்தொலைபேசிகளையும், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் மேற்படி நபர் கொடுத்துள்ளார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து இரண்டு கைத்தொலைபேசிகளும், இரண்டு சிம் கார்டுகளும், 20 ஆயிரத்து 300 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸாரின் இந்த விளக்கத்தையடுத்து சந்தேகநபரை இம்மாதம் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.