
– நூருல் ஹுதா உமர் –
கடற்கொள்ளையர்களிடமிருந்து தங்கள் மீன்களையும் மீன்பிடி உபகரணங்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு – அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மீனவர் சங்க பிரதிநிதிகள், இன்று (19) நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் கோரிக்கை விடுத்தனர்.
தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி என்பவர் தலைமையிலான குழுவினரே – தங்களின் மீன்களை கடலில் வைத்து கொள்ளையிடுவதாகவும், இதன்போது பெறுமதி மிக்க தங்கள் வலைகளை அவர்கள் அறுத்தெடுத்துச் செல்வதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
‘கடற்கொள்ளையர்களிடமிருந்து மீனவர்களின் உடமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல்’ எனும் தலைப்பில் – மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கூட்டமொன்று, சாய்ந்தமருது தனியார் மண்டபமொன்றில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதே மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்கள்.
தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி என்பவர் தலைமையிலான குழுவினரே – இவ்வாறான கடற்கொள்ளையில் ஈடுபடுவதாக, அரச அதிகாரிகளிடமும், பொலிஸ் நிலையத்திலும் பல தடவை தாங்கள் முறையிட்டுள்ளதாக இதன்போது மீனவர்கள் குறிப்பிட்டனர். ஆனால் இதற்கு தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் – இதன்போது மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் கடற்கொள்ளையில் ஈடுபடும் மேற்படி சின்னத் தம்பி என்பவரின் சொத்துக்கள், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும், அந்த குழுவுக்கு அனுசரணையாக இருந்துவரும் அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா முரளிதரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மீன்பிடித்திணைக்கள உயர் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலைய உயர் அதிகாரிகள், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலாளர்கள், கல்முனை மாநகர ஆணையாளர்,விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், அதிகாரிகளும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக மீனவர்கள் இங்கு தெரிவித்தனர். எனவே மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.
“சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க – விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடந்த பாடில்லை. நாடாளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் என – பலரிடமும் பேசிய போதிலும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை”.
“மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது. 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட சிறியரக மீன்பிடி படகுகளில் வரும் கொள்ளையர்கள், இந்த மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பெரியளவில்டட நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம்”.
“கடற்கொள்ளையில் ஈடுபடும் சின்னத்தம்பிக்கு எதிரான ஆதாரங்களும், அவருக்கு உடந்தையாக இருக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கின்றன. சின்னத்தம்பி திருடுவதை கடந்த காலங்களில் ஒத்துக்கொண்டும் அவருக்கு முறையாக நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
சின்னத் தம்பிக்கு எதிராக மட்டுமல்ல, அவருக்கு உடந்தையாக இருந்துவரும் அரச அதிகாரிகள் மற்றும் சின்னத்தம்பி கும்பலிடமிருந்து மீன்களை வாங்கும் வியாபாரிகள் போன்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும், அங்கு பேசிய மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.








