தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை இலங்கை அனுப்பக் கூடாதென ஹக்கீம் கூறியமைக்கு அமைச்சர் பிமல் பதில்

ஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன நிலங்களில் – வேலைகளுக்காக, இலங்கை தொழிலாளர்களை தாங்கள் அனுப்பப் போவதில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுடன் ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணும் பல நாடுகளைப் போலவே, இலங்கையும் – தனது பொருளாதார நலனுக்காக தொழிலாளர்களை அனுப்புவது உட்பட தொடர்ந்து செயல்பட வேண்டியுள்ளது என, அவர் ஊடகங்களிடம் கூறினார்.

“இலங்கை திடீரென இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்டால், பொருளாதாரம் சரிந்துவிடும். மேலும் இஸ்ரேலில் தற்போது பணிபுரியும் பல இலங்கையர்கள் தங்கள் வேலைகளையும் இழக்க நேரிடும். நாங்கள் அதைச் செய்ய முடியாது. சவுதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயல்படும். அவை பாலஸ்தீனத்துடன் நிற்கின்றன, ஆனால் ராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடர்கின்றன” என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை வைத்து, இஸ்ரேலுடனான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. ஏனெனில் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விளக்கமளித்தார்.

“நாங்கள் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசையும், ஒரு சுதந்திர இஸ்ரேல் அரசையும் அங்கிகரிக்கிறோம். அவற்றை இரண்டு தனித்தனி நாடுகளாக இலங்கை கருதுகிறது. எனவே, இஸ்ரேலுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இலங்கை தொடர வேண்டியுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர பாலஸ்தீன நாடு என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது என்றும், இஸ்ரேலால் அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதை கண்டிக்கிறது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக தொழிலாளர்களை இலங்கை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ்தலைவருமான ரஊப் ஹக்கீம் சமீபத்தில் கூறியமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.