தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி
– ஜெம்சாத் இக்பால் –
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற பொத்துவில்லை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் நாடு திரும்பியபோது, அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தமது அமைச்சுக்கு அழைத்து பாராட்டிக் கௌரவித்ததோடு, அன்பளிப்புகளையும் வழங்கினார்.
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவஹாட்டி நகரில் இடம்பெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா 16ஆம் திகதி நிறைவடைந்தது.
இதில் முஹம்மத் அஷ்ரப் – தங்கப் பதக்கமொன்றையும், வெண்கலப் பதக்கமொன்றையும் வெற்றி கொண்டுள்ளார்.
பொத்துவில்லை பிறப்பிடமாக கொண்ட முஹம்மத் அஷ்ரப், தனது ஆரம்ப கல்வியை அங்குள்ள அல்-இர்பான் வித்தியாலயத்திலும், உயர் தர கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியில் வணிகப் பிரிவிலும் பயின்றார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த லுசபோனியா (Lusophony Games) விளையாட்டு போட்டியில் 400×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற உலக ராணுவ விளையாட்டு போட்டியில் 400×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நிறைவுபெற்ற இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவஹாட்டி நகரில் இடம்பெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 400×100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றதன் மூலம், அஷ்ரப் – இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் தேசிய மெய்வல்லுநர் அணியின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான மெய்வல்லுநரை ஊக்கமளிக்கும் விதமாக, முஹம்மத் அஷ்ரபை பாராட்டி, அன்பளிப்புகளை வழங்கிய அமைச்சர் ஹக்கீம், எதிர்காலத்தில் அஷ்ரப் வெளிநாடுளில் கலந்து கொள்ளும் திறந்த நிலை மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகளுக்கான அனுசரணைகளை, தமது சொந்த செலவில் வழங்குவதற்கும் முன்வந்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.என். முபீன் மற்றும் அமைச்சரின் நாடாளுமன்ற இணைப்பாளர் ஏ.எல்.எம். ஜவ்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.