
அரசாங்க சொத்துக்கள் பற்றிய முறையான கணக்காய்வு இதுவரை திறம்பட மேற்கொள்ளப்படவில்லை என்று, கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க சொத்து முகாமைத்துவத்தைச் சுற்றியுள்ள நெருக்கடிக்கு, அரசாங்க அதிகாரிகள் தங்கள் கடமைகளை திறம்படச் செய்யத் தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் கைத்தொழில் அமைச்சு ஏற்பாடு செய்த பயிற்சிப்பட்டறை ஒன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் பேசிய கணக்காளர் நாயகம்;
“அரசாங்கத்தின் சொத்துக்கள் பற்றி விபரங்களை ஒரே இடத்திலிருந்து பெற முடியும் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும்? இந்த விடயத்தில் அரசியல்வாதிகள் அல்லது அமைச்சர்கள் யாரும் ஈடுபடவில்லை. இந்தக் கணக்குள் – அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியானால் அந்த விபரங்கள் ஏன் ஒரே இடத்தில் இல்லை? குறைந்தபட்சம் எத்தனை அரச வாகனங்கள் உள்ளன என்று உங்களால் சொல்ல முடியுமா? கணக்கிடப்பட்டிருந்தால் அது நடந்திருக்க வேண்டும். ஆனால் அது ஏன் நடக்கவில்லை?” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில்; “சமீபத்தில், எங்கள் கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து அதிகமான தகவல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு நிறுவனங்களில் வாகனங்கள் இல்லை. நாங்கள் மிகவும் எளிமையான முறையில் கணக்கிட்டோம்” எனவும் தெரிவித்தார்.
இதையும் பாருங்கள்



