தலைப்புச் செய்திகள்

ஹரின் பிணையில் விடுவிப்பு

பொதுத் தேர்தல் காலத்தில் – தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 05 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தேர்தல் காலத்தில் பதுளை நகரத்தில் தனது விருப்பு இலக்கமான 10 இலக்கத்தைக் குறிக்கும் வகையில் ‘மெஸ்ஸி 10’ என எழுதபபட்ட டி- சேட்டினை, ஹரினும் அவரின் ஆதரவாளர்களும் அணிந்தவாறு வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை பொலிஸார் தடுக்க முற்பட்ட போது, தான் அணிந்திருந்த டி – சேட்டை கழற்றி வீசி விட்டு ஹரின் சென்றார். இந்த நடவடிக்கைகள் தேர்தல் சட்டத்தை மீறுபவை என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயங்கள் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக இன்று பதுளை பொலிஸ் நிலையத்துக் ஹரின் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.