
– மரைக்கார் –
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட மாட்டார் என, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தில் களமிறங்க வேண்டுமென, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் வலியுறுத்தினர்.
தற்போது சுகவீனமுற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் மஜீத், கொழும்பில் நடைபெற்ற மேற்படி உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில், அவர் தொலைபேசி வழியாக இணைக்கப்பட்டு, உச்சபீடத்தில் உரையாற்றினார். அதன்போது, அவரும் அம்பாறை மாவட்டத்தில் ரஊப் ஹக்கீம் போட்டியிட வேண்டுமெனக் கூறினார்.
இது குறித்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் பேசுகையில்; ”அது திட்டமிடப்பட்ட ஒரு விடயமாகவே தெரிந்தது. ரஊப் ஹக்கீமுடைய விசுவாசிகள் – அவரை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென அழைத்தமை, முன்கூட்டியே பேசி வைக்கப்பட்ட விடயம் என்பது அப்பட்டமாக தெரிந்தது” என்றார்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் ரஊப் ஹக்கீம் போட்டியிட்டால், அம்பாறை மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படும் என்கிற பேச்சுக்கள் மேலெழத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் ரஊப் ஹக்கீம் போட்டியிட மாட்டார் என, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த முறை கண்டி மாவட்டத்தில் ரஊப் ஹக்கீம் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.



