
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, இன்று (21) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
ஊழல் அரசியல்வாதிகள் என முன்னர் முத்திரை குத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டதன் மூலம் – தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து – அவர் இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
“சஜித் பிரேமதாச தனது அரசியல் எதிர்காலத்திற்காக இன்னும் ஐந்து வருடங்கள் பொறுமையாக இருந்திருந்தால், இந்த சவாலை நாங்கள் எதிர்கொண்டிருக்க மாட்டோம். நான் சஜித் பிரேமதாசவிடம் கூறுகின்றேன், உங்களை இந்தப் பாதாளத்துக்குள் தள்ளுபவர்கள் அடுத்த முறை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க விரும்புகிறார்கள், அவர்கள் உங்களை ஜனாதிபதியாக்க விரும்பவில்லை” என, அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் காமினி அத்துகோரளவின் சகோதரியான தலதா அத்துகோரள, 2004 ஆம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்றம் நுழைந்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் அவர் நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.
2020 பொதுத் தேர்தலில், அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 45,105 வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நாடாளுமன்றம் நுழைந்தார்.



