சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவு

🕔 July 18, 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வருடம் மார்ச் 28ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தப் பின்னணியில் ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்பு மனுவை (Revision petition) கவனத்திற் கொண்ட நீதிமன்றம், இன்று (18) காலை அவருக்கு பிணை வழங்குமாறு உத்தரவிட்டது.

ஞானசார தேரருக்கு மார்ச் 28, 2024 அன்று, கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததோடு, 100,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் உத்தரவிட்டது.

கூரகல பௌத்த ஆலயத்தில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போது, ​​தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில், இஸ்லாமிய மதத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை ஞானசார தேரர் வெளியிட்டார்.

இதனையடுத்து குற்றவியல் சட்டத்தின் கீழ் – சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் – ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்ட நீதிபதி, அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையினையும் 01 லட்சம் ரூபாய் அபராதத் தொகையினையும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத்தை செலுத்த தவறினால் ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்குமாறு உத்தரவிடப்பட்ட்டது.

இந்த நிலையில், சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு இணங்க – அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்