போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது

🕔 July 4, 2024

– அஷ்ரப் ஏ சமத் –

தீபால் ரொஸான் குமார எனும் பொது சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி – எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை, கல்கிசை பிரசேத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கல்கிஸை – படோவிட்ட பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 22ஆம் திகதி 2200 கிராம் போதைப் பொருளுடன் செய்யப்பட்டார். அப்போது, பொதுச் சுகாதார பரிசோதகரின் கொலையில் அவர் சம்பந்தப்பட்டிருந்தமையை பொலிஸார் தெரிந்திருக்கவில்லை.

இந்த நிலையில், சந்தேக நபரிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டிருந்தன. அதில் ஒரு துப்பாக்கிக்குரிய சில தோட்டாக்கள் இல்லாமல் போயிருந்தன. அதுபற்றி சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போதே, அவர் பொதுச் சுகாதார பரிசோதகரை சுட்டுக் கொன்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகர் தீபால் ரொஸான் குமாரவை ஒப்பந்த அடிப்படையில்இவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்த நிலையில், சந்தேக நபருக்கு தங்குமிட வசதிகளை வழங்கி உதவிய 03 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து பெக் ரக 09 எம்.எம். அமெரிக்க தயாரிப்பு பிஸ்டல்கள் இரண்டும் அதற்குரிய சன்னங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இக் கொலைக்கு பயன்படுத்திய இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எச். மாரப்பன – இன்று (04) கல்கிசைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பரிசீலித்தார்.

ஏற்கனவே, இந்தக் கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்