ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு

🕔 July 4, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்ததையடுத்து, விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) ஒத்திவைத்துள்ளது.

ஆட்சேபனைகளை எழுத்துமூலம் வழங்க – சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

2015 ஆம் ஆண்டு தெமட்டகொடயில் டிபென்டரைப் பயன்படுத்தி – இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில், ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி – தெமட்டகொட பகுதிக்கு கறுப்பு நிற டிபென்டர் ஜீப்பில் வந்த சிலர் தன்னைக் கடத்திச் சென்று தாக்கியதாக, பாதிக்கப்பட்ட அமில பிரியங்கர தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்