கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

🕔 July 2, 2024

லங்கையில் கடன் நிலைபேறுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவசியவசியமான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நற்செய்தி தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களாக இருதரப்பு கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் கழகத்தின் நாடுகளுடன் உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அதே தினம் சீனா எக்சிம் வங்கியுடன் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான இரண்டு அத்தியாவசிய விடயங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். மேலும், இலங்கையில் இந்தக் கடனை மறுசீரமைப்பது குறித்து சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால் இந்த நாட்டில் உள்ள சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக கடன் மறுசீரமைப்பு செயல்முறையை நற்செய்தியாகப் பார்க்க மறுக்கின்றன.

இது, ஒரு நாடு என்ற வகையில் மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பதைக் கூற வேண்டும். இது தொடர்பான புரிதல் இல்லாத காரணத்தால் தான் – நாம் செய்த பணிகள் குறித்து சில தரப்பினர் இவ்வாறு கூறுகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால், அந்த கருத்துகள் குறுகிய அரசியல் நோக்கங்களால் கூறப்பட்டவை என்பது இப்போது தெளிவாகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதத்தின் மூலம் அது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே அரசியலையும் பொருளாதாரத்தையும் கலந்து நாட்டின் முன்னேற்றத்தை சீர்குலைப்பவர்களின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். கானா, ஈக்வடார் (Ecuador) ஆர்ஜென்டினா போன்ற நாடுகளின் நிலைமை குறித்து சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பில் உள்ள வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நடுத்தர வருமானம் கொண்ட நாடான நம் நாட்டில் கடன் மறுசீரமைப்பு என்பது குறைந்த வருமானம் கொண்ட நாட்டின் கடன் மறுசீரமைப்பை விட சிக்கலானது.

ஆனால் நடுத்தர வருமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த கடன் மறுசீரமைப்பில் இலங்கை முன்னணியில் உள்ளது. மேலும், கடன் மறுசீரமைப்பின் 03 முக்கிய விடயங்களை செயற்பாட்டின் ஊடாக நிரூபிக்க நாம் தயாராக உள்ளோம். அதன்படி, எங்களின் கடன் வழங்குநர்கள் கடனை செலுத்த 2024 முதல் 2027 வரை அவகாசம் அளித்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் எமக்குக் கிடைக்கும் சுமார் 05 பில்லியன் டொலர்களின் நன்மையை, நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2032ஆம் ஆண்டுக்குள், அரச கடன் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 95% வரைக் குறைக்கப்பட வேண்டும். 2027 மற்றும் 2032 காலக்கட்டத்தில் மொத்த நிதித் தேவை 13% வரைக் குறைக்கப்பட வேண்டும். 2027-2032 காலகட்டத்தில் வெளிநாட்டுக் கடன் சேவையும் 4.5% வரைக் குறைக்கப்பட வேண்டும்.

இந்த 03 இலக்குகளை நிறைவு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட கடன் மறுசீரமைப்புக்கு நாம் இப்போது உடன்பட்டுள்ளோம். அதன்படி, இந்த நாட்டிற்கான கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதற்காக நிலவிய அனைத்து நிச்சயமற்ற தன்மையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் இலங்கையில் பணவீக்கம் 70% இலிருந்து 1.7% வரை குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் திறைசேரி உண்டியல் ஏலத்தில், ஓராண்டு திறைசேரி உண்டியல்களின் வட்டி விகிதம் 10% ஐ எட்டியுள்ளது” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்