குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு

🕔 June 11, 2024

– பாறுக் ஷிஹான் –

குடிபோதையில் வாகனத்தைச் ஓட்டிச்  சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை மோதி விட்டு – தப்பி சென்ற  வைத்தியர், நேற்று (10) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 01 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய வைத்தியரை 05 லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (10)  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பேரிம்பராஜா பகிர்தன் (வயது-41) எனும் வைத்தியரை 05 லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த விபத்தில் சிக்கிய வைத்தியரின் வாகன அனுமதி பத்திரம் காலாவதியாகி உள்ளமை , அபாய நிலையில் வாகனத்தை செலுத்தியமை மற்றும் மது போதையில் சென்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் வைத்தியர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கு எதிர்வரும்   ஜூலை மாதம் 31 ஆம் திகதி மறுவிசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (08) இரவு 11 மணியளவில் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை, மேற்படி வைத்தியர் ஓட்டிச் சென்ற கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதன் போது – வைத்தியர் தனது காரை – வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி விட்டு, தப்பிச் சென்றிருந்தார்.

விபத்துக்குள்ளான இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்