திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான நிலையம் திறைக்கப்பட்டமை தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்

🕔 June 7, 2024

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான விற்பனை நிலையத்தை திறக்க அனுமதித்தமைக்காக, அங்குள்ளவர்கள் நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதி – அதில் 400 பேர் கையொப்பமிட்டு பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் மதுபான விற்பனை மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் – அமைச்சர் அந்த கடிதத்தை முன்வைத்துப் பேசினார்.

அரசாங்கம் மதுபானத்தை ஊக்குவிக்காத போதிலும், மதுபான அனுமதிப்பத்திர விவகாரத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

“இந்தப் பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஜூலை 01, 2022 முதல் மே 21, 2024 வரை விண்ணப்பித்த 1424 பேரில் 404 பேருக்கு மட்டுமே உரிமங்கள் வழங்கப்பட்டன. உரிமங்களை வழங்குவது ஒரு நுணுக்கமான செயல்முறை மற்றும் விசாரணை மூலம் நடைபெறுகிறது. எனினும், இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது” என ராஜாங்க அமைச்சர் கூறினார்.

“30 ஆண்டுகளுக்கும் மேலாக, திகனயில் ஒரே ஒரு மதுபான உரிமம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. அதனால் விற்பனையாளர் ஏகபோகமாகச் செயற்பட்டார். மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை அங்கு வாங்க முடியவில்லை” என்று கடிதத்தை மேற்கோள் காட்டி அமைச்சர் குறிப்பிட்டார்.

திகன பகுதி மக்கள் – பிரபலமான மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக மெனிக்ஹின்ன, தெல்தெனிய, மற்றும் நத்தரம்பொத பகுதிகளுக்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அங்குள்ளவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

திகனயில் ஒரேயொரு மதுபான நிலையம் இருந்த போது, அங்கு சந்தை விலையை விடவும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை- அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும் மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது மதுபான விற்பனை நிலையத்தை திறக்க அனுமதித்தமைக்காகவும், போட்டியை ஏற்படுத்தியமைக்காகவும், நகரத்தில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியமைக்காகவும் கடிதத்தை எழுதியவர்கள் அதிகாரிகளை பாராட்டியுள்ளதாகவும், ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரசாங்கம் மது பாவனையை ஊக்குவிக்கவில்லை என வலியுறுத்திய ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 2023ஆம் ஆண்டில் மதுபானங்களின் விலை 108% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“அரசாங்கத்தின் கொள்கை கலால் வரி வருவாயில் இருந்து தெரிகிறது. மது நுகர்வு 2022இல் 43 மில்லியன் லீட்டரிலிருந்து 2023இல் 35 மில்லியன் லீட்டராக குறைந்தது. இது 19% வீழ்ச்சியாகும். இதேவேளை வருடாந்த மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணம் 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக மென் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சியம்பலாபிட்டிய இந்த தகவல்களை வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்