டெங்கு நோயாளர்கள் 25 ஆயிரம் பேர் இந்த வருடம் பதிவு: பாடசாலைகளில் நுளம்புகள் பெருகுமிடங்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு

🕔 June 5, 2024

பெரும்பாலான பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்படுவது ஆபத்தான நிலை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 90,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அதேபோன்று, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 25,000 நோயார்கள் பதிவாகியுள்ளனர். ஜனவரிக்குப் பிறகு, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததுள்ள” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தபோதிலும், மே மாத இறுதிக்குள் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு காணப்படுகின்ற அதேவேளை, எதிர்காலத்தில் நிலவும் பருவ மழையினால் நோய் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் 93,874 வளாகங்களை ஆய்வு செய்துள்ளோம், மேலும் 28,310 நுளம்பு உற்பத்தி இடங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்கிடையில், நுளம்பு ‘லார்வாக்கள்’ உள்ள 4,890 வளாகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன,” என்றார்.

ஏறக்குறைய ஐந்தில் ஒரு பாடசாலையில் நுளம்பு ‘லார்வாக்கள்’ பெருகும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தனியார் வகுப்புகள் போன்ற இடங்களில் 9% நுளம்பு லார்வாக்கள் பெருகும் இடங்களை கண்டறிந்துள்ளதாகவும் டொக்டர் சமரவீர மேலும் கூறினார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக – சுகாதார பூச்சியியல் அதிகாரி சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்