அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக, டொக்டர் ஜவாஹிர் மீண்டும் நியமனம்: பொறுக்க முடியாத பிரதேச வாதம் மீண்டும் தலையெடுப்பு

🕔 June 2, 2024

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 62 பொறுப்பதிகாரிகளை நியமித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அவர்களின் பெயர்ப்பட்டியலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி. மஹிபால நேற்று (01) வெளியிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், டொக்டர் ஜவாஹிர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கராக கடமைகளைப் பொறுப்பேற்பதைத் தடுக்கும் வகையில், நாளைய தினம் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சிலர் திட்டமிடுவதாக புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கான முன் ஏற்பாட்டுக் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் இன்று (02) மாலை 4.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ‘நமது வைத்தியசாலையைப் பாதுகாப்போம்’ எனும் தலைப்பில், ‘நமது வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள அநீதியைத் தடுப்போம்’ எனக் குறிப்பிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன், மேற்படி கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் சிலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்கராக 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

இவரின் பணிக்காலத்தில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மேம்பட்டதாடு, வைத்தியசாலை மிகச் சிறப்பான பல அடைவுகளையும் எட்டியது.

2019ஆம் ஆண்டு டொக்டர் ஜவாஹிர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக இருந்தபோது, அந்த வைத்தியசாலைக்கு – ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில், தேசிய ரீதியாக தங்க விருதும், தேசிய பசுமை அறிக்கை வெளியீட்டில் சிறப்பு விருதும் கிடைத்தன.

2018ஆம் ஆண்டு ஜனாதிபதி பசுமை விருது வழங்கும் விழாவில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை – டொக்டர் ஜவாஹிர் தலைமையில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக பிரதேச வாதத்தை முன்னிறுத்தி, அக்கரைப்பற்றிலுள்ள சில அரசியல்வாதிகளும், வைத்தியசாலையின் ஒரு தரப்பினரும் சில அற்ப நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்ததோடு, அவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர். இதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலைக்கு 18. 08.2021 அன்று, டொக்டர் ஜவாஹிர் மாற்றலாகிச் சென்றிருந்தார்.

அங்கு அவரின் திறமையான நிர்வாகத்தினால் – கிண்ணியா தள வைத்தியசாலை, பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டதோடு, சிறப்பான பெயரையும் பெற்றது.

இந்தப் பின்னணியில்தான், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் டொக்டர் ஜவாஹிர் பணியாற்றிய போது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதே வைத்தியசாலைக்கு மீண்டும் வைத்திய அத்தியட்சகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை சகித்துக் கொள்ள முடியாத – பிரதேச வாதம் கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த சிலர், டொக்டர் ஜவாஹிர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு எதிராக, நாளை ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

‘அக்கரைப்பற்று வைத்தியசாலையின் அத்தியட்சகராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் இருக்கக் கூடாது’ என்கிற வன்மம் நிறைந்த மேற்படி பிரதேச வாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு – அக்கரைப்பற்றை நேசிக்கும் அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும், அக்கரைபை்பற்றிலிருந்து குரல்கள் எழுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, டொக்டர் ஜவாஹிர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாங்களே ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தவுள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் செயலாளர் யூ.எல்.ஏ. லத்தீப் ஜின்னா – ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில், இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கூட்டத்துக்கான அழைப்புக் கடிதத்தில், மேற்படி நபரே கையொப்பமிட்டுள்ளார்.

எனவே, அவரைத் தொடர்புகொண்டு ‘புதிது’ செய்தித்தளம் வினவிய போதே, அவர் இந்தப் பதிலைக் கூறினார்.

டொக்டர் ஜவாஹிர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தமையினால்தான் அவர் ஏற்கனவே அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்பட்டார் என்றும், ஆனாலும் சுகாதார அமைச்சு அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் -அவரை மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கே அத்தியட்சகராக நியமித்துள்ளதாகவும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் செயலாளர் லத்தீப் ஜின்னா மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்தச் செய்திகளையும் வாசியுங்கள்:

01) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை; அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம்

02) அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்