அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை; அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம்

🕔 July 8, 2021

– மரைக்கார் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிரை, அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சில சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

குறித்த வைத்தியசாலையிலுள்ள சில வைத்தியர்கள், இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளதுடன், இதன் பின்னணியில் பிரதேச அரசியல்வாதியொருவர் உள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதற்கமைய வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில், வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான மேற்படி கடிதங்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ள – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைச் சங்கத்தைச் சேர்ந்த சிலரே, வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான முறைப்பாட்டை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் – தாய் சங்கத்துக்கு முறையிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

டொக்டர் ஜவாஹிர்: யாரிவர்?

வைத்திய நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ள டொக்டர் ஜவாஹிர் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். இவர் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் நிர்வாகத்தில் சிறப்பான மாற்றங்களைச் மெற்கொண்ட டொக்டர் ஜவாஹிர், தேசிய ரீதியில் ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’களை இரண்டு தடவையும், ‘தூய்மைப் பாதுகாப்புக்கான விருதை’ ஒரு தடவையும் என, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தனது தலைமையில் மூன்று தடவை தேசியளவிலான விருதுகளைப் பெற்றுக் கொடுத்து, அந்த வைத்தியசாலையின் அந்தஷ்தை உயர்த்தினார்.

வைத்திய அத்தியசட்சகர் ஜவாஹிர், தனது உத்தியோகத்தர்களுடன் சுற்றாடல் விருதை பெற்றுக் கொண்ட தருணம்

அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்றுக் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிற்றூழியர்களாக வந்த சிலரின் மிக மோசமான நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் தரக்குறைவாகப் பார்க்கப்பட்ட அந்த வைத்தியசாலையை, தனது பதவிக் காலத்தில் டொக்டர் ஜவாஹிர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே டொக்டர் ஜவாஹிருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுகாதார அமைச்சுக்கு முறையிட்டுள்ளோர், வைத்திய அத்தியட்சகர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடிதத் தலைப்பில் – வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் ஒன்றின் பிரதி, தற்போது சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.

அம்பலமாகியுள்ள ஆசாமிகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெனாண்டோ கையெழுத்திட்டு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள், வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான சூழ்ச்சியில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அரசியல்வாதியொருவரின் பங்குபற்றுதல் உள்ளமையினை அம்பலப்படுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில்; ‘சில மதத் தலைவர்களும், அதிகாரம் கொண்ட உள்ளுர் அரசியல்வாதி’யும், சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தை இது குறித்து தொடர்பு கொண்டு பேசியதாகவும், வைத்திய அத்தியட்சகரை அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் முக்கிய பதவிகளை வகிக்கின்றபோது, ‘அக்கரைப்பற்று பிரதேசவாதத்தினால்’ பழி தீர்க்கப்படுவது நீண்ட கால வரலாறாகும்.

அக்கரைப்பற்றின் சில அரசியல்வாதிகள் இந்த பிரதேசவாதத்தின் பின்னாலும், முன்னாலும் இருந்து வருகின்றமையினையும் மக்கள் நன்கறிவர்.

அப்படியென்றால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எழுதிய கடித்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல்வாதியும் மேற்படி பிரதேசவாதியாகவே இருக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாதான், வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராகச் செயற்படும் அந்த அதிகாரம் கொண்ட உள்ளுர் அரசியல்வாதி என, சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி பலரும் எழுதி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா

அதேபோன்று அதாஉல்லாவின் கட்சி சார்பில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினராகவுள்ளவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ்தான், வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக – சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முறையிட்ட ‘மதத் தலைவர்’ என்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படையாகவே எழுதப்பட்டு வருகிறது.

இதேவேளை, வைத்திய அத்தியட்சகர் பதவியிலிருந்து டொக்டர் ஜவாஹிரை அகற்றி விட்டு, அந்த இடத்துக்கு அக்கரைப்பற்றைச் சேர்ந்த அதாஉல்லாவின் விசுவாசி ஒருவரை நியமிப்பதற்கான எத்தனமொன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம் வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிரான இந்த சூழ்ச்சி நடவடிக்கைகளின் பின்னணியில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக இருந்து, ஊழல் மோசடி காரணமாக பதவியிறக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவரும் உள்ளார் எனவும் பேச்சுகள் உள்ளன.

இவை இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் சில வைத்தியர்கள் உரிய நேரத்துக்கு கடமைக்கு சமூகமளிப்பதில்லை என்றும், கடமைக்கு வராத சந்தர்ப்பங்களிலும் மேலதிக நேரக் கொடுப்பனவைக் கோருவதாகவும், அதற்கு வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் உடன்படாமை காரணமாகவே, அவருக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் கிளர்ந்து எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிர் காப்பதை நாம் காப்போம்

2007ஆம் ஆண்டு மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த பலர் – வைத்திய அத்தியட்சகர்களாக பதவி வகித்துள்ள போதிலும், அவர்கள் எவராலும் உருவாக்க முடியாத தீவிர சிகிச்சைப் பிரிவை, வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் உருவாக்கி, அதனை கடந்த வாரம் திறந்து வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே, மக்களின் ‘உயிர் காக்கும்’ செயற்பாடுகளுடன் தொடர்புடைய வைத்தியசாலையொன்றில் பிரதேசவாதத்தைப் புகுத்தி, அங்கு மிகவும் நேர்மையாகவும் சிறப்பாகவும் கடமையாற்றும் வைத்திய அத்தியட்சகர் ஒருவரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் அரசியல் செயற்பாடுகளை, நேர்மையான எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே, பிரதேசப் பாகுபாடுகள் மற்றும் அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சிந்தித்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மேற்படி விடயத்தில் – இந்தப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்