காஸா சிறுவர் நிதியத்துக்கு 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது: மே 31 வரை உதவலாம்

🕔 May 28, 2024

காஸா சிறுவர் நிதியத்திற்கு – இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்றுவரை 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது.

காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக, அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அத்தியவசியத் தேவைகளுக்கு உதவும் பொருட்டு, நிதியமொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்கமைய காஸாவிலுள்ள சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதியமொன்றை ஆரம்பித்து, கடந்த இப்தார் நிகழ்வுகளுக்கு ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றினால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதி – முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் (UNRWA)ஊடாக 04-01-2024 ஆம் திகதி பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடைக்கு மேலதிகமாக, காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கமைய இலங்கையின் நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கு நிதி வழங்கின.

இதன்படி, காஸா பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ,அந்த நிதி எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகவர் அமைப்பிடம் வழங்கப்பட உள்ளது.

மேலும், பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மே 31ஆம் திகதி வரை இதற்காக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு, மேற்கண்ட தொகையுடன், அதுவரை பெறப்பட்ட முழு நன்கொடைகளும் துரிதமாக ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகவர் நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி, இவ்வருடம் மார்ச் மாதம் 04 ஆம் திகதி காஸா சிறுவர் நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்