03 லட்சத்துக்கும் அதிகமான மின்தடைகள் கடந்த சில நாட்களில் பதிவு: இ.மி.ச பொறியியலாளர் சங்கம் தெரிவிப்பு

🕔 May 24, 2024

மூன்று லட்சத்துக்கும் அதிகமான மின்தடை சம்பவங்கள் கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் ஒரு மணி நேரத்திற்குள் 30,000 க்கும் அதிகமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட மின் தடைகளை மீளமைப்பதில், கணிசமான காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாமதங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்தச் சங்கம், சிக்கல்களைத் தீர்க்க குறைந்த எண்ணிக்கையிலான தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மின் தடைகளையடுத்து அதிகளவு அழைப்புகள் – இலங்கை மின்சார சபைக்கு வந்ததாகவும், பாவனையாளர்களின் பல அழைப்புகளுக்கு இதன்போது பதிலளிக்கப்படவில்லை எனவும், அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம், மின்தடையின் போது எந்தவொரு மின் கம்பிகளையும் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்