பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கிகரிக்கின்றோம்: அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அறிவிப்பு

🕔 May 22, 2024

யர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பலஸ்தீனத்தை – ஒரு தனி நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளன. இதனால் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான தமது தூதுவர்களை திருப்பி அழைக்க இஸ்ரேஸ் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இன்று (22) புதன்கிழமை பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் (Simon Harris), “இன்று அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவிக்கின்றன. இந்த முடிவை செயல்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் தேசிய ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எதிர்வரும் வாரங்களில் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்வதில் மேலும் நாடுகள் எங்களுடன் சேர்ந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இதேவேளை, பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு, இரு நாடுகள் எனும் தீர்வை அயர்லாந்து ஆதரிப்பதாகவும் பிரதமர் சைமன் கூறியுள்ளார்.

“இரு நாடுகள் எனும் தெளிவான இந்தத் தீர்வு அறிக்கை, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் அவர்களின் மக்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஒரே நம்பகமான பாதை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து தலைநகரம் டப்ளினில் அந்த நாட்டு பிரதமர் சைமன் ஹாரிஸ் இந்த அறிக்கையை விடுத்த பின்னர் பேசிய – ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பன் பார்த் ஈடே ஆகியோர், மே 28ஆம் திகதி தொடங்கள் தமது நாடுகள் பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாகக் கூறினர்.

பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கு எதிரான போராட்டம் நியாயமானதாக இருந்தாலும், பலஸ்தீன அமைதிக்கான திட்டம் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இல்லை என்பது தெளிவாகிறது என்றும் அயர்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்