அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

🕔 April 24, 2024

லங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும் போது, ஈரானிய ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவை வழங்குவதாகவும் இப்றாஹிம் ரைசி உறுதியளித்தார்.

அனைத்து ஆசிய நாடுகள், நமது அண்டை நாடுகள் மற்றும் இறையாண்மை மற்றும் சுதந்திர நாடுகளுடன் – இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த ஈரான் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரைசி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்காக ஒரு நாள் விஜயமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

ஏப்ரல் 2008 இல் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அஹ்மதி நஜாத் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், ஈரானின் ஜனாதிபதியொருவர் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி ரைசி நாட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே 514 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உமாஓயா நீர்மின் திட்டத்தை திறந்து வைக்கும் பொது விழாவில் பங்கேற்றார்,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்