ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு

🕔 April 24, 2024

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற கூற்றை நிராகரித்த சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உறுதியளித்தார்.

21 ஏப்ரல் 2019 அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சரியான நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்தார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு நியமிக்கப்படும் என உறுதியளித்த அவர், இந்தக் குழுவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வாளர்கள் இருப்பார்கள் என்றார்.

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்; ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்று உறுதிபட கூறினார்.

உத்தேச ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சுயாதீனமான அரச வழக்குரைஞர் அலுவலகத்தை நிறுவவும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

தற்போதைய அரசாங்கம் குண்டுவெடிப்பு பற்றிய உண்மையை – கம்பளத்தின் கீழ் துடைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்