ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்தார்

🕔 April 24, 2024

ரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் பொது விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் திறப்பு விழாவை நிறைவு செய்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவர் இன்று கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியின் விஜயத்தின் சிறப்பம்சமாக ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

உமா ஓயா திட்டத்தின் திறப்பு விழாவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த விசேட அழைப்பின் பேரில் – ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் ஈரான் ஜனாதிபதி கலாநிதி மஹ்மூத் அஹ்மதி நஜாத் இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், ஈரானிய ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தைத் தொடர்ந்து உமா ஓயா திட்டம் இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஈரானின் ஃபராப் எரிசக்தி மற்றும் நீர் திட்டங்களின் (ஃபராப் நிறுவனம்) உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டத்தின் முதன்மை நோக்கமானது, வருடாந்த சராசரியாக 145 மில்லியன் கன மீற்றர் உபரி நீரை உமா ஓயா படுகையில் இருந்து கிரிந்தி ஓயா படுகைக்கு திருப்பி விடுவதன் மூலம் – நாட்டின் தென்கிழக்கு உலர் பிரதேசத்தில் நீர் பற்றாக்குறையை போக்குவதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்