செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் இன்று ஆரம்பம்

🕔 April 19, 2024

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்துக்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம். ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378,835 மெற்றிக் தொன் பருப்பு, 41,208 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் – பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்துக்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம். ரிப்லான் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஊடாக ‘ஆரோக்கியமான சுறுசுறுப்பான மாணவர் தலைமுறை’ என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உயர்த்த பங்களித்தல், மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய – இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்