இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

🕔 April 14, 2024

ஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது.

இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஊடகங்களிடம் பேசும்போது, நள்ளிரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஈராக் மற்றும் யெமனிலிருந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஈரான் ஏவிய 99% ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்னதாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே பிரிட்டன், அமெரிக்கா, ஜோர்டான் ஆகிய நாடுகள் – இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உதவி வந்த நிலையில், பிரான்ஸும் உதவி வழங்கியுள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் நெவாட்டிம் விமானத் தளம் குறைந்தது 15 பலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகவும் சேதத்தின் அளவும் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அல் ஜசீரா கூறியுள்ளது.

ஆனால் இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் வீழ்த்த இஸ்ரேலுக்கு அமெரிக்கப் படைகள் உதவியதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமது தாக்குதல் நிறைவடைந்துள்ளாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால் பெரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க ஈரானுக்கு எதிரான எந்தவொரு இஸ்ரேலிய பதில்தாக்குதலையும் அமெரிக்கா ஆதரிக்காது என்று – அமெரிக்க ஜனாதிபதி நேற்று இஸ்ரேலிய பிரதமரிடம் கூறியதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், “பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பின் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன்” இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்