வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர்

🕔 April 11, 2024

– மப்றூக், படங்கள் எம்.எப். றிபாஸ் –

மூகத்திலுள்ள வறுமை நிலையை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – தான் களமிறங்கப் போவதாக, நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவர் பொறியிலாளர் உதுமான்கண்டு நாபிர் தெரிவித்தார்.

‘சிலோன் ஜேர்னலிஸ்ட்ஸ் போரம்’ அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கென அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ‘இஃப்தார்’ நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

‘சிலோன் ஜேர்னலிஸ்ட்ஸ் போரம்’ – அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் – பொறியியலாளர் நாபீர் தொடர்ந்து பேசுகையில்; அம்பாறை மாவட்டத்தில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குடும்பங்களிடையே வறுமையைக் குறைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

“வறுமையை குறைக்கலாமே தவிர ஒழிக்க முடியாது. அம்பாறை மாவட்டத்திலுள்ள 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளன. வறுமையைக் குறைப்பதற்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதனை இங்குள்ள எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்யவில்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் உறக்கத்தில் உள்ளனர்” எனவும் அவர் கூறினார்.

வறுமையைக் குறைப்பதற்கான யுக்திகளைக் கண்டறிந்து அதனை ஊடகவியலாளர்கள் எழுத வேண்டும் என்றும் பொறியியலாளர் நாபீர் கேட்டுக் கொண்டார். அவ்வாறான எழுத்துக்களைக் காணும் சமூக அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் – வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

”கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் சமூகப் பணியில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதனூடாக சமூகத்தில் நிலவும் வறுமையைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றேன். ஆனால் சமூகத்தில் வறுமை கூடிக்கொண்டே செல்கின்றதே தவிர குறையவில்லை. அதனால்தான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கி – வறுமையை குறைப்பதற்கான திட்டங்களை முன்வைக்கவுள்ளேன்” என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை தன்னால் அழைத்து வர முடியும் என – இதன்போது நம்பிக்கை தெரிவித்த பொறியியலாளர் நாபீர்; அதனைச் செய்வதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்றார். எனவே, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை முஸ்லிம் பிரதிநிதியொருவர் பெறுவதற்கான ஒப்பந்தத்தை அரசாங்கத்துடன் செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்கும் போது, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன்” எனவும், பொறியிலாளர் நாபீர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் ஆகியோரின் பணிகளைக் கௌரவித்து, அவர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்