பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

🕔 April 11, 2024

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் செவ்வாய்கிழமை (9) இடம்பெற்றது, இதில் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார் என கூறினார்.

“ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்து அதை அறிவிக்கும் பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷவிடம் பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடம் ஒப்படைத்தது. நாங்கள் அது பற்றிய கருத்துக்களை வெளியிட மாட்டோம். அவர் ஒரு கட்டத்தில் முடிவை அறிவிப்பார்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிக்கு சென்றுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பிக்கும் பொறுப்பை – கட்சியின் ஒழுக்காற்று சபையிடம் அரசியல் பீடம் ஒப்படைத்துள்ளது.

“கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எமது உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த அரசியல் பீட கூட்டத்தின் போது, ஒரு ஒழுக்காற்று சபை நியமிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஒழுக்காற்றுக் குழுக்களை நியமித்து, அத்தகைய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்த சபையிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்