சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சஜித், சுமந்திரன், பீரிஸ் உள்ளிட்ட எதிரணி கையொப்பம்

🕔 February 26, 2024

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (26) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டன.

இதன்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எம்.ஏ. சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, ஜி.எல். பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கையொப்பமிட்டுள்ளனர். ஒழுங்கற்ற நடைமுறைகளுக்கு மத்தியில் – சர்ச்சைக்குரிய சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்ட மூலத்துக்கு அங்கிகாராம் வழங்கியதாகத் தெரிவித்து, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இணைய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் போது, உச்சநீதிமன்றம் வழங்கிய ஒன்பது பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாகவும், அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

“சட்டவிரோதமான முறையில் இணைய பாதுகாப்புச் சட்டத்துக்கு சபாநாயகர் அங்கிகாரம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்தோம். உச்ச நீதிமன்றத்தின் 09 பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்காலத்தில் சபாநாயகர் மீது பாராளுமன்றத்திற்கு நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்” என்றும் சஜித் பிரேமதாச கூறியிருந்டதார்.

அந்தவகையில், இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்துள்ளதாக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்