கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை

🕔 February 21, 2024

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

குறித்த ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடை கோரும் (writ) வழக்கு நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தத் தடை உத்தரவை நீதிபதி வழங்கினார்.

இந்த வழக்கின் 46 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி ஜே. றாஸி முஹம்மட் மற்றும் சட்டத்தரணி எப்.எச்.ஏ. அம்ஜாட் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் 2020.09.16 ஆம் திகதி கோரப்பட்டு அதற்கான பரீட்சைகள் 2021.02.27 மற்றும் 2021.10.30 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தன.

அந்தப் பரீட்சைகளின் பெறுபேறுகள் புள்ளிவாரியாக வெளியிடப்படாமல், வெறுமனே நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என ஒரு பட்டியலும், குறித்த பரீட்சையில் வெட்டுப்புள்ளியை விடக் குறைவாகப் பெற்றவர்கள் என ஒரு பட்டியலுமாக இரண்டு பட்டியல்கள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன – என்ற காரணத்தினால், பரீட்சையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நீதி முறையான எதிர்பார்ப்பு (Legitimate Expectation) தமக்கு இருப்பதனை பிரதான அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கினை மனுதாரர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கின் பிரதிவாதிகளாக கிழக்கு மாகாணப் பொதுச்சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், கிழக்கு மாகாணப் பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர், கிழக்கு மாகாணப் பொதுச்சேவைகள் ஆணைக்குழு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கினை ஆதரித்து சட்டத்தரணி ஜே. றாஸி முஹம்மட் மேற்கொண்ட சமர்ப்பணத்தினையும், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தினையும் ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, மனுதாரர்களால் ஆளுநர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக, பிரதானமாகக் கோரப்பட்ட ‘வழக்கு நிறைவடையும் வரை குறித்த நியமனம் வழங்கப்படக் கூடாது’ என்ற இடைக்காலத் தடை உத்தரவுக்கும் அனுமதியினை வழங்கினார்.

மனுதாரர்களின் நீதி முறையான எதிர்பார்ப்பு தொடர்பில் – சட்டம் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மனுதாரர்களுக்கு இருப்பதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்