38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

🕔 February 12, 2024

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி  யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இன்றைய தினம் (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் – நினைவுச் சின்னம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் கியாஸ்தீன் 1986ஆம் ஆண்டு வைத்தியராக நியமனம் பெற்று – சாய்ந்தமருது வைத்தியசாலையில் முதன்முதலாக கடமையைப் பொறுப்பேற்றார்.

இவர் தனது பணிக்காலம் முழுவதும் – சொந்த மாவட்டமான அம்பாறை மாவட்டத்திலேயே பணியாற்றியிருந்தார்.

1990ஆம் ஆண்டு தொடக்கம் 1992ஆம் ஆண்டு வரை, நாட்டில் பயங்கரவாதப் பிரச்சினை உச்ச கட்டத்தில் இருந்தபோது – அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய மூன்று பிரதேச வைத்தியசாலைகளிலும் – தனியொரு வைத்தியராக அர்ப்பணிப்புடன் இவர்பணியாற்றியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

குறித்த மூன்று வைத்தியசாலைகளுக்கும் இவர் ஒருவர் மட்டுமே – அந்தக் காலப்பகுதியில் வைத்தியராக இருந்தார்.

இவரின் தந்தை எம்.ஏ. சம்சுதீன் – அட்டாளைச்சேனையின் முதலாவது விஞ்ஞான பட்டதாரி (BSC) ஆவார்.

பொத்துவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. ஜலால்தீன் இவரின் சிறிய தந்தை (தந்தையின் இளைய சகோதரர்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டொக்டர் கியாஸ்தீனுடைய மற்றொரு சிறிய தந்தை சாபிடீன் என்பவர் – அட்டாளைச்சேனையின் முதலாவது கலைமாணிப் பட்டதாரி (BA) ஆவார்.

இவரின் சகோதரர்களில் ஒருவரான சட்ட முதுமாணி எஸ். நியாஸ் என்பவர், இலங்கை சுங்கத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களில் மேற்படி பதவியை வகித்த முதல் நபர் – நியாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குடும்பப் பின்னணியைக் கொண்ட டொக்டர் கியாஸ்தீன், தனது 63ஆவது வயதில் அரச பணியிலிருந்து இன்றைய தினம் ஓய்வுபெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்