தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

🕔 February 11, 2024

– முன்ஸிப் அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, பலஸ்தீன் தேசியக் கொடியைக் கொண்ட சால்வையை அணிந்து கொள்வதற்கு அனுமதி கேட்டதாகவும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். அதனைடுத்து, பட்டமளிப்பு முடிந்த கையோடு, அவர் – விழா மேடையில் ஏறி, பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

”கல்வி ரீதியாக ஒரு பட்டத்தை பெற்றுக் கொள்ளும் இந்த நாள் – எனக்கு மகிழ்ச்சிகரமானது என்றாலும் கூட – பலஸ்தீனத்தில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் இஸ்ரேல் தாக்குலில் கொல்லப்படுவதை நினைக்கையில், இந்த சந்தோசத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை” என, இதன்போது ‘புதிது’ செய்தித்தளத்திடம் யஸீர் அரபாத் கூறினார்.

எனவே, பலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவையும், இஸ்ரேலுக்கான எதிர்ப்பையும் – இதுபோன்றதொரு பெரிய மேடையில் வெளிப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்பதற்காகவே, பலஸ்தீன் கொடியை தான் சால்வையாக அணிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தனது இரண்டரை வயதில் தாயை இழந்த யஸீர் அரபாத், தன்னுடைய பெரியம்மாவிடம் (தாயின் மூத்த சகோதரி) வளர்த்ததாகக் குறிப்பிட்டார். இள வயதில் தனது படிப்பை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்ட போது, தனது பெரியம்மாவின் பெரு முயற்சிகளால் படிப்பைத் தொடர்ந்து, இன்று பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகக் கூறிய யசீர் அரபாத், இதன்போது தனது பெரியம்மாவை உணர்ச்சிகரமாக நினைவுகூர்ந்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் படித்து, இன்றைய தினம் தனது கலைமாணிப் பட்டதை யஸீர் அரபாத் பெற்றுக் கொண்டார்.

நேற்றும் இன்றும் 06 அமர்வுகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா – மிகவும் சிறப்பாய் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments