தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 10 வருடங்களை இழந்து பெற்ற, கலைமாணிப் பட்டங்கள்

🕔 February 11, 2024

– கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 10 வருடங்களுக்கு தமது படிப்பைத் தொடங்கியவர்களுக்கு இன்று (11) பட்டங்கள் வழங்கப்பட்டன.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா நேற்று (10) பல்கலைழக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் ஆரம்பமான நிலையில், அதன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (11) தொடர்ந்து இடம்பெற்றன.

இன்றைய நிகழ்வுகள் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் வழிகாட்டலில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றன.

இரண்டாம் நாளின் நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பேர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் இன்றைய தினம் 2014/2015ஆம் ஆண்டு கலைமாணி பட்டப்படிப்புக்காக வெளிவாரியாகப் பதிவு செய்து, தமது படிப்பை ஆரம்பித்த சுமார் 2500 பேரில் 644 பேர் – இன்று பட்டம் பெறத் தகுதி பெற்றிருந்தனர்.

ஆயினும் அவர்களில் சிலர் இன்றைய தினம் – தமது பட்டங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் நேற்றும் இன்றுமாக 1441 உள்வாரி மாணவர்களும் 711 வெளிவாரி மாணவர்களுமாக – மொத்தம் 2152 பேர் – இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்களை பெற்று வெளியேறினர்.

நான்காவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை வணிக நிர்வாகத்தில் 09 பட்டதாரிகளும் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமாவில் 09 பட்டதாரிகளும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் ஞாபகார்த்த விருதினை ஜுனைடீன் பாத்திமா ஷனா பெற்றுக் கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ துறையில் சிறந்த மாணவருக்கான விருதினை முஹம்மட் அலியார் பாத்திமா ஜில்ஷா பெற்றார்.

தொடர்பான செய்தி: 10 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட பட்டப்படிப்பு; கேள்வி கேட்ட ஊடகவியலாளர்: மன்னிப்புக் கேட்டார் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர்

Comments