தமிழரசுக் கட்சியின் உயர் பதவிகளுக்கான தெரிவு தொடர்பில், கல்முனைக் கிளை அறிக்கை

🕔 January 29, 2024

பாறுக் ஷிஹான்

மிழரசு கட்சியின் வளர்ச்சிக்கு சிறந்த காத்திரமான முடிவுகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் ஶ்ரீதரன் தெரிவித்ததன் மூலம் – புதிய உத்வேகத்தோடு கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்முனைத் தொகுதிக் கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 21 ம் திகதி வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் – இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கல்முனை கிளையினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெற்ற பின்னர் நடைபெற்ற – பொதுச்சபைக் கூட்டத்தில் ஸ்ரீதரன் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் கட்சியின் ஏனைய பதவிகள் தொடர்பில்  மத்திய குழுவின் தீர்மானங்கள் என்பவை தொடர்பாகவும் அவ்வறிக்கையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

‘எமது அம்பாறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உப தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டமையானது அம்பாறையில் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சியதாக அமைந்திருக்கின்றது. பல தசாப்த காலமாக உயர் பதவிகள் கட்சியின்  சார்பில் எமது மாவட்டதிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இம்முறை அவ்வாறு ஒரு பதவி வழங்கி இருப்பதானது, கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக தொகுதிக் கிளை சார்பில் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கின்றோம்’ என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தலைவர் தேர்வில் – தற்போதைய தலைவருக்கான பரப்புரையில் ஈடுபட்ட சிலர் உயர்பதவிகளுக்காக சிபார்சு செய்யப்பட்டபோதிலும் கட்சியின் நலன், சமனிலைத் தன்மையை பேணல் என்பவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமையானது, எதிர்காலத்தில் கட்சி பாரபட்சமற்று பயணிக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் கட்சியினால் எடுக்கப்படவுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்பை தொகுதிக் கிளை சார்பிலும், அம்பாறை மாவட்டம் சார்பிலும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்