பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி

🕔 December 8, 2023

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இவ்வருடம் ஜூலை 01ஆம் திகதி வரையான கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 268,920 ஆக குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 275,321 என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 284,848 ஆகவும், 2020 இல் 03 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6,401 ஆக குறைந்துள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41,786 பிறப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள், உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் வருடாந்தப் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளமை – சுகாதார அமைச்சின் அறிக்கைகளினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள்  சங்கத்தின் தலைவி  தேவிகா கொடித்துவக்கு, நாடளாவிய ரீதியில் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Comments