ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு

🕔 December 1, 2023

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டதாக 53% க்கும் அதிகமான இலங்கை மக்கள் நம்புகின்றனர் என்று ‘சிண்டிகேட்டட் சர்வேஸ்’ (Syndicated Surveys) மூலம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்’ என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று விதமான பார்வைகள் – கணக்கெடுக்கப்பில் கருத்து தெரிவித்தவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மிகவும் ஒப்புக்கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

1) ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.

2) உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

3) உள்ளூர் அரசியல் சக்திகளுடனும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடனும் இணைந்து செயற்பட்ட இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

இதில் 53% வீதமானோர் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டனர். 30% வீதமானோர் இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். 23% வீதமானோர் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர்.

உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக 8% வீதமானோர் மட்டுமே நம்பினர் (முதல் பதில்). 39%, வீதமானோர் தங்களிடம் இது தொடரபில் எந்த கருத்தும் இல்லை எனக் கூறினர் அல்லது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

21 ஏப்ரல் 2019 அன்று (ஈஸ்டர் ஞாயிறு) மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்.

Comments