காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

🕔 November 27, 2023

காஸா பகுதியில் அமுலிலுள்ள இடைக்கால போர் நிறுத்தை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அமீர் அல் – அன்சாரி தெரிவித்துள்ளார்.

இதனை ஹமாஸ் இயக்கமும் உறுதிப்படுததியுள்ளதாக அல் – ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், அதே நிபந்தனைகளின்படியும் தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளதாக, அல் – ஜசீராவின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை தெற்கு காஸாவில் உள்ள கான் யூனுஸ் பகுதிக்குள் இதுவரை அனுமதிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் குறைவாகவே உள்ளன என்று, அல் – ஜசீரா செய்தியாளர் தாரிக் அபு அஸும் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் நிறுத்தம் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள செய்தியை பலஸ்தீனர்கள் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்புகளுக்கிடையிலான நான்கு நாள் இடைக்கால போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்த நிலையில், இன்று நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலேயே, மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த போர் நிறுத்தத்துக்கான மத்தியஸ்தத்தினை கட்டார் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: காஸாவில் போர் நிறுத்தம் இன்று நிறைவுக்கு வருகிறது: தொடர்வதற்கு நெதன்யாஹு நிபந்தனை விதிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்