ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவுக்கு 14 நாட்கள் தடை: நீதிமன்றம் உத்தரவு

🕔 November 7, 2023

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான (SLC) இடைக்கால குழுவை நியமிப்பது தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவு இன்று (07) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் முன்னாள் கிறிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழுவின் பணிகள் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிந்திருக்கவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 04 பேர் கொண்ட விசேட அமைச்சவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம், இடைக்கால நிர்வாகமும் நியமனம்: வர்த்தமானி மூலம் அறிவிப்பு

Comments