உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு

🕔 November 6, 2023

– பாறுக் ஷிஹான் –

ரசாங்கம் – பொருட்கள் மற்றும சேவைகளின் விலைகளை அதிகரிக்கின்றதே தவிர, உற்பத்திகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவிக்க ஞாயிற்றுக்கிழமை (5)  சம்மாந்துறையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும் எனவும் அவர் இதன்போது கூறினார்.

“கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.

வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால்> கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும். அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும்.

இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.

இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று – வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த லாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது. நாடு வங்குரோத்தடைந்தது” என, அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்;

“எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் – நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று  வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், கேஸ், எரிபொருட்ளின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.

ஒரு சில தொழில்களை வழங்கினாலும், கடந்த 03 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது.

வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும், இங்கு வந்து வாக்குறுதிகளை தருவார்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கான பணம் யாரிடமும் கிடையாது. இதிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம். 

இதற்கு முதல் – எங்கள் கடனை அடைக்கும் பணம் இக்காலப் பகுதியில் எம்மிடமில்லை. அதனால் 2028ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

வைத்தியசாலைகளில் மருந்து வேண்டும். தாதிகள் இருக்க வேண்டும். வைத்தியர்கள் இருக்க வேண்டும். உபகரணங்கள் இருக்க வேண்டும். இதனை தீர்க்க வேண்டும். மாணவர்கள் காலையில் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். பாடசாலைகளில் உபகரணங்கள் இருக்க வேண்டும். இதனை விட உணவுப் பிரச்சினை உள்ளது. 

பசளையில்லா காரணங்களினால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மூலமாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

சூரிய சக்தி மின்சாரத்தை புத்தளம் முதல் முல்லைத்தீவு வரை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாண பிரதேசத்தில் காற்றாடி மூலமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அதனால் புதிய முறையில் டொலரை தேட வேண்டியுள்ளது. இந்தியாவின் தமிழ் நாடு மற்றும் கேரளா போன்ற பிரதேசங்கள் மிகவும் முன்னேற்றம் அடைவதற்கு காரணம் என்ன? கொரியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் மிகவும் வேகமாக முன்னேறுவதற்கு காரணம் என்ன?

அவர்கள் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை விடவும் – டிஜிடல் சேவையை அனுப்புவதன் மூலமாகத்தான் முன்னேற்றமடைந்துள்ளனர். ஆதலால் டிஜிடல் மூலமாக அதிகம் சம்பாதிக்க முடியும். இந்த வேலைத் திட்டங்களை செய்வதற்கு ஒரு நிபந்தனை இருக்கின்றது. 

அதுதான் நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும்.கடந்த 40 வருடங்களில் தமிழ் இளைஞர்கள் நினைத்தார்கள் – தமிழர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்கினால் அதன் மூலமாக வளமான நாட்டை உருவாக்க முடியுமென்று நினைத்தார்கள். அதன் மூலமாக அவர்கள் மட்டுமல்ல நாங்களும் பாதிக்கப்பட்டோம்.

ஜே.வி.பி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று புரட்சி செய்தார்கள். அவர்களும் அழிந்து போனார்கள்.

முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகமான உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும்.

பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்ற வேண்டும். தந்தைக்கு பின் மகன், தாய்க்கு பின் மகள் என்ற அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்