காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

🕔 November 1, 2023

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன.

காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் சிகிச்சைக்காக தமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடவைக்கு அருகில் உள்ள எகிப்திய நகரத்தில் கள மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய தரப்புக்களுக்கு இடையே அமெரிக்காவின் ஒருங்கிணைப்பில் – கட்டாரின் மத்தியஸ்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, இது நடைமுறைக்கு வந்துள்ளது.

காயமடைந்தவர்களுடன், ரஃபா கடவை வழியாக – காஸாவை விட்டு வெளியேறக்கூடிய வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்களின் பட்டியலும் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜாவுரிமைகளைக் கொண்டவர்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை, கடவை மற்றும் எல்லைகளுக்கான பலஸ்தீன அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அவர்கள் இன்று கடவை வழியாக வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஃபா கடவை வழியாக காஸாவை விட்டு இன்று வெளியேறுவோரில் அமெரிக்கர்களும் உள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்