அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

🕔 October 31, 2023

– அஹமட் –

ம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்’களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 1200 மாணவர்களை, நாளை 01ஆம் திகதி சாய்ந்தமருதிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றுக்கு அழைத்து, இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

நாளை 01ஆம் திகதி அரச பாடசாலைகளின் மூன்றாந்தவணைக் காலம் ஆரம்பமாகும் நிலையில், மேற்படி 1200 மாணவர்களும் – பாடசாலை நேரமான காலை 8.30 மணிக்கு, மேற்படி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், பாடசாலை நேரத்தில் தனியார் இடமொன்றில் அரசியல்வாதியொருவர் கலந்து கொள்ளும் மேற்படி நிகழ்வில், 1200 பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதற்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகம் எவ்வாறு அனுமதி வழங்க முடியும் எனவும் பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

நான்தான் அனுமதி கொடுத்தேன் – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்

இது குறித்து கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ‘எம்.எஸ்.சஹ்துல் நஜீம்’மிடம் வினவியபோது, குறித்த நிகழ்வில் மாணவர்களை கலந்து கொள்வதற்கான அனுமதியினை தானே வழங்கியதாகத் தெரிவித்தார்.

“விடுமுறையின் பின்னர் நாளை பாடசாலைகள் ஆரம்பமாகின்றன. எனவே விடுமுறையின் பின்னரான முதல் நாள் என்பதால் – பாடசாலைகளில் அனைத்துப் பாடங்களும் நடைபெற மாட்டாது. அதனால்தான் பாடசாலை வேளையில் நடக்கும் அந்த நிகழ்வில் – மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கினேன்” எனவும் அவர் கூறினார்.

மேலும் மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்தரங்கு ஒன்று நடத்தப்படுவதற்காகவே அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அந்த நிகழ்வில் வளவாளராக கலந்து கொள்ளவுள்ளமையினாலேயே, மாணவர்களை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள – தான் அனுமதித்துள்ளதாகவும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ‘எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க மேற்படி நிகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில், நாடாளுமன்ற ‘செங்கோல்’ படம் பயன்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியமையினை அடுத்து, ‘செங்கோல்’ படம் நீக்கப்பட்டு – வேறோரு அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆபத்தான விடயங்கள்

மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கென நடைபெறவுள்ளதாக கூறப்படும் மேற்படி நிகழ்வில்- பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் என்பவர், இலங்கையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் வினைத்திறன் குறைந்த ஒருவராவார்.

மிகக் குறைந்தளவான நாடாளுமன்ற அமர்வுகளிலேயே இவர் கலந்து கொண்டுள்ளார் என்பதும், நாடாளுமன்றில் மிகவும் அரிதாகவே இவர் உரையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் – அவைச் செயற்பாட்டின் அடிப்படையில், அவர்களை நிரல்படுத்தும் manthri.lk இணையத்தளமானது, இலங்கையிலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை 211 ஆவது இடத்துக்கு பின்தள்ளியுள்ளது.

எனவே, மாணவர் நாடாளுமன்ற உறுப்பிர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்காக நடத்தப்படும் கருத்தரங்கு ஒன்றின் பிரதம அதிதியாக – நாடாளுமன்ற செயற்பாட்டில் மிகவும் மோசமான மட்டத்திலுள்ள ஹரீஸ் எம்.பியை அழைப்பதென்பது மிகப்பெரும் முரண்பாடாகும்.

இது தவிர, குறித்த நிகழ்வு நடைபெறவுள்ள தனியார் மண்டபமானது 1200 பேரை ஒரே நேரத்தில் உள்ளடக்குவதற்கான இடவசதியற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறமாக, 1200 எனும் பெருந்தொகையான மாணவர்களை அழைக்கும் ஒரு நிகழ்வில் எவ்வாறான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு ஏற்பாடாகியுள்ளது என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளன.

எனவே, ஓர் அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்காக, மாணவர்களின் நலன்களைப் பலிகொடுக்கும் வகையில் நடத்தப்படவுள்ள மேற்படி நிகழ்வை – உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே, சமூக அக்கறையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோர் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

நாடாளுமன்ற செங்கோல படம் பயன்படுத்தப்பட்ட அழைப்பிதழ்
225 நாடாளுமுன்ற உறுப்பினர்களில் ஹரீஸ் எம்.பிக்கு 211ஆவது இடத்தை manthri.lk வழங்கியுள்ளது

Comments