பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்: சம்பவத்தையடுத்து குடும்பத்துடன் தலைமறைவு

இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர் – தீவிர வலதுசாரி இஸ்ரேலிய கும்பலால் அவரது வீட்டில் வன்முறைத் தாக்குதலை எதிர்கொண்டதை அடுத்து தலைமறைவாகியுள்ளார்.
இஸ்ரேல் ஃப்ரே (Israel Frey) எனும் யூத இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே – இஸ்ரேலிலுள்ள அவரின் வீட்டில் இருந்தபோது தாக்குதலை எதிர்கொண்டார்.
காஸாவில் குண்டுவெடிப்பை சகித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு, ஆதரவை வெளிப்படுத்தியமைக்காகவே அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு, இஸ்ரேல் ஃப்ரேயின் வீட்டைச் சுற்றி வளைத்த – தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்களின் கூட்டம், வானத்தை நோக்கிச்துப்பாக்கிச் கூடு நடத்தியதோடு, மரண அச்சுறுத்தல்களையும் விடுத்தது.
இஸ்ரேலிய மற்றும் அரேபிய ஊடகங்களுக்காகப் பணியாற்றும் ஃப்ரே, 10 நாட்களில் 2,750க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிரை காஸா பகுதியில் கொன்ற – இஸ்ரேலிய கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
காஸாவிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக – ஊடகவியலாளர் .ஃப்ரே யூதர்களின் துக்கப் பிரார்த்தனையான ‘கதிஷ்’ ஓதியதோடு, அதனை வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
இஸ்ரேலிய பத்திரிகை ஹாரெட்ஸ்வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஊடகவியலாளர ஃப்ரே, சனிக்கிழமை இரவு இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து தாக்கப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர்கள் யூத மதத்தை தீவிரமாகப பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் – ஃப்ரேயை தேசத்துரோகி என குற்றம் சாட்டினர்.
துப்பிய பொலிஸ்
இதனையடுத்து ஃப்ரேயும் அவரின் குடும்பத்தினரும் சில மணிநேரங்களுக்குப் பிறகு பொலிஸாரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது, ஒரு பொலிஸ் அதிகாரி – தன் மீது வேண்டுமென்றே துப்பியதாகவும், ஹமாஸை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியதாகவும் ஃப்ரே குற்றம் சாட்டினார்.
ஆயினும் இஸ்ரேலிய போலீஸ் குற்றச்சாட்டுகளை மறுத்தது.
இதன் பின்னர் வைத்தியசாலையிலும் எதிர்ப்பாளர்களை ஃப்ரே சந்திக்க நேர்ந்தது. இருந்தபோதும் நண்பர் ஒருவரின் உதவியுடன் அந்த நெருக்கடியிலிருந்து அவர் தப்பித்தார்.
இந்த பின்னணியில் தான் பழிவாங்கப்படலாம் எனும் பயத்தில் ஃப்ரே தலைமறைவாகிவிட்டார் என, ‘மிடில் ஈஸ்ட் ஐ’ மற்றும் ‘ஹாரெட்ஸ்’ ஆகிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் – ஐந்து முறை பொலிஸ் விசாரணைக்கு அழைத்திருந்தும் அவர் சமூகமளிக்காததை அடுத்து, பாலஸ்தீனிய பயங்கரவாதத்தையும் வன்முறையையும் சமூக ஊடகத்தில் தூண்டினார் எனும் குற்றச்சாட்டில் ஃப்ரே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.